நோக்கம்

காமராஜர் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி குழு என்பது,
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக ஜனவரி 2021 முதல்,
நல்லாசிரியர் ஆ. கார்த்திக் ராஜா அவர்களின் முன்னெடுப்பில்,

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியாக
“இணையவழிக் கல்வி வானொலி” (Online KalviRadio – www.kalviradio.com @ KR Team)
மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த கல்விசார் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட தன்னார்வக் கல்வி அமைப்பாகும்.

கல்வி வளர்ச்சி, ஆசிரியர் ஒத்துழைப்பு, மாணவர் முன்னேற்றம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன், இக்குழு இலாப நோக்கமற்ற, அரசியல் சார்பற்ற மற்றும் மதச்சார்பற்ற கல்விச் சேவை அமைப்பாகச் செயல்படுகிறது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பல்திறன் மேம்பாட்டிற்கான அனைத்து நற்பணிகளையும், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன், அவர்களின் வழக்கமான பணிகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவர்களின் பணிக்கு துணையாகவும், வலுவூட்டும் செயல்பாடாகவும், ஓய்வு நேரங்களிலோ அல்லது பணி நேரத்திற்கு வெளியிலோ தன்னார்வ அடிப்படையில் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது இக்குழுவின் அடிப்படை நோக்கமாகும்.

அமைப்பின் நோக்கம்
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக
  • ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்தல்....
  • கற்றல்–கற்பித்தல் திறனை மேம்படுத்தும் கல்வி வளங்கள் , செயல்பாடுகள்& தொழில்நுட்பவசதிகளை உருவாக்குதல், ஊக்குவித்தல், பாதுகாத்தல் மற்றும் பகிர்தல்....
  • பயிற்சிகள், கருத்தரங்குகள், இணையவழி நிகழ்ச்சிகள் மற்றும் பிற கல்விசார் முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்தல்.
  • ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் முறைகள், சிறந்த கல்விச் செயல்பாடுகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தல்பாராட்டுதல், விருதுகளுக்குப் பரிந்துரைத்தல் மற்றும் ஊக்குவித்தல்....
  • உதவி மற்றும் ஆதரவு வழங்க விரும்புபவர்களையும், தேவைப்படுபவர்களையும் அடையாளம் கண்டு, அவர்களின் தேவைக்கேற்ப ஒருங்கிணைத்தல்.
  • பிற அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் கல்விசார் முயற்சிகளுடன், தேவைக்கேற்ப இணைந்து செயல்படுதல்.
இக்குழு, அதன் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பணப் பலன் அல்லது தனிநபர் நலன் வழங்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல. மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பல்திறன் மேம்பாட்டை முன்னிறுத்தி, அதனை ஒத்த எண்ணமும் கல்விச் சேவை மனப்பான்மையும் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் தன்னார்வக் குழுவாக இணைத்தும் , மேற்கண்ட நோக்கங்களுடன் செயல்படும் பிற அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள் ஆகியவற்றுடன் தேவைக்கேற்ப இணைந்தும் செயல்படுவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

உறுப்பினர்களின் பங்கு
தனது வழக்கமான பணி மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், தனது பணியின் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இக்குழுவின் வாய்ப்புகள் மற்றும் வளங்களைத் தன்னார்வத்துடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • வளப் பங்களிப்பாளராக தனது கல்விசார் படைப்புகள் மற்றும் வளங்களைப் பகிரலாம்.
  • பயனாளியாக பிற உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் கல்வி வளங்களைத் தனது கல்விசார் செயல்பாடுகளில் பயன்படுத்தலாம்.
  • ஆதரவாளராக கல்வி ஆர்வலர்களை ஒருங்கிணைத்து இயன்ற வகையில் ஒத்துழைக்கலாம்.
இவ்வாறான பங்களிப்புகளை, எவ்வித தனிப்பட்ட பணப் பலன், தனிநபர் நலன், பரிசு, பாராட்டு அல்லது பிற தனிப்பட்ட எதிர்பார்ப்பும் இன்றி, சேவை மனப்பான்மையுடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொள்ளலாம்.

அமைப்பின் தன்மை
காமராஜர் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி குழு, 
  • இலாப நோக்கமற்ற தன்னார்வக் கல்விச் சேவை அமைப்பாக செயல்படும்.
  • கல்விசார் செயல்பாடுகள் தன்னார்வப் பங்கேற்பு மற்றும் கூட்டு முயற்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  • கட்டாயக் கட்டணம் அல்லது தனிப்பட்ட பொருளாதார இலாபத்தை நோக்கமாகக் கொண்டிருக்காது. 
  • அரசியல் சார்பற்ற அமைப்பாக செயல்படும். 
  • மதம், சாதி, மொழி உள்ளிட்ட வேறுபாடுகளின்றி, அனைவரையும் சமமாக மதித்து கல்விசார் செயல்பாடுகளை மேற்கொள்ளும்.


No comments:

Post a Comment